1948-ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24-ஆம் தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள், “நான் கலந்து கொள்ளும் இறுதி மாநாடு இதுவாகத்தான் இருக்கும். உங்கள் அனைவரையும் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்பதற்காகவே இம்மாநாட்டிற்கு வந்தேன்” என்று பேச மாநாடே மனம் கலங்கிப் போனது.
அவருக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும், நடிகவேள் எம்.ஆர்.இராதா சென்னையிலிருந்து மென்பஞ்சு மெத்தை, தலையணைகளை வாங்கிச் சென்று கொடுத்து, நலம் விசாரித்து வந்தார்.
அவரைச் சென்று உடல்நலம் விசாரித்த கலைவாணரிடம், சாவைக் கண்டு கூட நான் அஞ்சவில்லை. ஆனால் என் குடும்பத்தைக் கடனில் விட்டுவிட்டுப் போகிறேனே என்பதுதான் வருத்தமாய் உள்ளது என்றாராம். கலைவாணர், நான் பார்த்துக்கொள்கிறேன். நீ கவலைப்படாமல் இரு என்று ஆறுதல் கூறிவிட்டு வந்தாராம்.
அதற்குப் பிறகு உடல்நிலை குன்றி பட்டுக்கோட்டை அழகிரி, 28.03.1949 அன்று இயற்கை எய்தினார். அவரின் இறுதிச் சடங்குகள் தஞ்சையில் நடைபெற்று, வடவாற்றங்கரையிலே அடக்கம் செய்யப்பட்டார்.
இறுதிச்சடங்குகள் முடிந்த பின், அழகிரியின் மகன் இராமமூர்த்தியை அழைத்து, கடன் எவ்வளவு என்று கலைவாணர் கேட்க, குடும்பச் சொத்து அடமானம் மட்டும் ரூபாய் பன்னிரண்டாயிரம் என்று இராமமூர்த்தி கூற, பக்கத்திலிருந்த யதார்த்தம் பொன்னுசாமியை அழைத்துத் தொகை நிரப்பப்படாத காசோலையைக் கொடுத்து, இவர்களின் குடும்பச் சொத்துக்களை மீட்க அன்போடு கட்டளையிட்டாராம் திரையுலகக் கொடைவள்ளல் கலைவாணர்.
பட்டுக்கோட்டை அழகிரியின் பிற கடன்களை அடைப்பதற்காக தஞ்சையில் மாபெரும் அளவில் ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் பெறப்பட்ட தொகையில், தன் பணத்தையும் போட்டு, அண்ணாவின் தலைமையில் அத்தொகை அழகிரி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
அது மட்டுமின்றிச் சிறிது காலம் கழித்துக் கலைவாணர், அழகிரி மகனுக்குத் தன்னுடைய தலைமையில் திருமணத்தையும் நடத்தி வைத்தார். கம்பருக்குச் சடையப்ப வள்ளலைப் போன்று பட்டுக்கோட்டை அழகிரிக்கு கலைவாணர் என்று கூறுவது முற்றிலும் உண்மை.
நன்றி: தமிழ் ஓசை, 23.06.2008